×

தூக்கில் தொங்கிய மருமகன் மகள் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்

நாகர்கோவில், மே 10 :  மகள் கொலை வழக்கை சிபிசிஐடி வசம் மாற்ற வேண்டும் எனக் கேட்டு அவரது தாயார் கலெக்டரிடம் மனு அளித்தார். தடிக்காரன்கோணம் சிஎம்எஸ் ஏரியா பகுதியைச் சேர்ந்த வசந்தா (60) என்பவர் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தோவாளை தாலுகாவில் கடந்த 4 வருடத்திற்கு முன்பு 2018 ஜனவரி 5ம் தேதி எனது மகள் லலிதா மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு கழுத்தில் அணிந்திருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு வீட்டு பக்கத்தில் உள்ள 2 ஆண்கள் மற்றும் 2 பெண்களை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.அதன் பின்னர் 2018 பிப்ரவரி 2ம் தேதி அன்று எனது மருமகன் இளைய பெருமாள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டு இருந்தார். இதுவரையிலும் கொலை செய்த கூலிப்படை தலைவனையும், கொலை செய்தவர்களையும் காவல் துறை கைது செய்யவில்லை. 2 கொலைகளையும் ஒரே கும்பல் செய்துள்ளதாக தெரிய வருகிறது. இது சம்பந்தமாக காவல் துறையில் உள்ள சில அதிகாரிகள் கூலிப்படைத் தலைவன், கொலை செய்தவர்களை காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார்கள்.கொலையை மறைக்க கூலிப்படை தலைவன் ரூ.5 லட்சம் வரை பெற்றுக்கொண்டதாகவும், கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை கூலிப்படை தலைவன் விற்று விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த கொலைகள் சம்பந்தமாக உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு தரவும் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள ஊர் பொதுமக்கள் சார்பாக வேண்டுகிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது வசந்தாவுடன் ஊர் பொதுமக்களும் வருகை தந்திருந்தனர்.

Tags : CPCIT ,
× RELATED சயானிடம் சிபிசிஐடி போலீசார் 8மணி நேரம் விசாரணை