×

திருவனந்தபுரம் விமானநிலையத்தில் 2 தலைமறைவு குற்றவாளிகள் 7 ஆண்டுக்கு பிறகு கைது

நீடாமங்கலம், மே 10: நீடாமங்கலம் தலைமறைவு குற்றவாளிகள் இருவர் ஓமன் நாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பியபோது திருவனந்தபுரம் விமானநிலையத்தில் வைத்து 7 ஆண்டுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகில் உள்ள ராயபுரம் கிராமத்தில் கடந்த 2015ம் ஆண்டு இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது இதில் அம்பேத்கர் தெருவை சேர்ந்த செல்வமணி (31) என்பவர் நீடாமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் 25 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். அதில் 23 பேர் தஞ்சையில் உள்ள வன்கொடுமை நீதி மன்றத்தில் வழக்கு நடந்து தள்ளுபடியானது.

வழக்கில் தொடர்புடைய ராயபுரம் தெற்குத்தெரு வீரையன் மகன்கள் ராஜா(40), சதீஷ்(36) ஆகிய இருவரும் வழக்கில் ஆஜராகாமல் ஓமன் நாட்டிற்கு சென்று விட்டனர். இதனால் திருச்சி உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களுக்கும் இவர்களது விபரங்களையும், தலைமறைவு குற்றவாளி என 2015ம் ஆண்டே போலீஸ் தரப்பில் அனுப்பப்பட்டது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சொந்த ஊருக்கு வருவதற்காக நேற்றுமுன்தினம் திருச்சி விமான நிலையத்திற்கு வராமல் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தனர்.

அப்போது அங்குள்ள போலீசார் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை கணினி இயந்திரத்தில் பார்த்ததில் தலைமறைவு குற்றவாளிகள் என தெரிய வந்தது. உடனே அவர்களை அமர வைத்து திருவாரூர் எஸ்.பி க்கு தகவல் கொடுத்தனர். எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின்பேரில் நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சப்இன்ஸ் பெக்டர் ராஜேஸ்கண்ணன், தலைமை காவலர் ராதாகிருஷ்ணன், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் திருவனந்தபுரம் விரைந்து சென்று ராஜா, சதீஷ் இருவரையும் கைது செய்து நீடாமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சீத்தாலெட்சுமி 2 பேரையும் 13ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். பிறகு இருவரும் மன்னார்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Thiruvananthapuram airport ,
× RELATED கன்னியாகுமரிக்கு பிரதமர் நரேந்திர...