×

மாநகர் போக்குவரத்து கழகத்தில் 16 பணிமனைகள் நவீனமயமாக்கப்படும்: பிரபாகர் ராஜா எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில்

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா (திமுக) பேசுகையில், ‘வடபழனி பேருந்து நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும். கலைஞர் நகர் பணிமனையில் 1,100 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இங்குள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளதால், இந்த பேருந்து நிலையத்தையும் நவீனமயமாக்க வேண்டும். மேலும், இந்த பேருந்து நிலையங்களில் புட் கோர்ட் அமைத்தால், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். அரசுக்கு வருமானமும் வரும். மேற்கத்திய நாடுகளைப்போல் நவீன விளம்பர பலகைகள் வைத்தால், அதிலும் அரசுக்கு வருமானம் வரும்.

மேலும், 18 எம், 41 எப், 37 டி பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கிறது. அதையும் இயக்க வேண்டும். சாதாரண பேருந்துகளான 5இ, 11ஜி, 12ஜி, 70சி, 17டி, எஸ்26, எஸ்86 ஆகிய பேருந்துகளையும் அதிகமாக இயக்க  வேண்டும்,’ என்றார். இதற்கு பதிலளித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், ‘‘வணிக வளாகங்களுடன் பணிமனைகளை நவீனமயமாக்கி வருவாய் ஈட்டுதல் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சி குழும நிதி உதவியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவன ஒருங்கிணைப்புடன் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெறும்’ என்றார்.

Tags : Municipal Transport Corporation ,Minister ,
× RELATED தாம்பரம் – சென்னை கடற்கரை ரயில்கள்...