×

தொழிலாளர்களுக்கு வழங்கிய வீட்டு மனை பட்டாவை ரத்து செய்த திருத்தணி தாசில்தார் உத்தரவுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நிலமற்ற மற்றும் தினக் கூலி தொழிலாளர்களுக்கு வழங்கிய வீட்டு மனை பட்டாக்களை ரத்து செய்து திருத்தணி வட்டாட்சியர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தணியை சேர்ந்த ஜெயவேல், தேவகி உள்ளிட்ட 21 பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், திருத்தணியில் உள்ள நிலமற்ற மற்றும் தினக்கூலி தொழிலாளர்கள் என 130 பேர் பயனடையும் வகையில் வீடு கட்டுவதற்காக ஒதுக்கிய நிலத்தை கடந்த அதிமுக அரசு ஒதுக்கியது. அந்த இடத்திற்கான பட்டாவை 2020ம் ஆண்டு திருத்தணி தாசில்தார் வழங்கினார்.

பட்டா நிபந்தனைகளின்படி, நிலம் ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் வீடு கட்டப்பட வேண்டும். ஆனால், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் மற்றும் ஒதுக்கப்பட்ட நிலத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கான மனைகளின் எல்லைகளை குறிக்காதது போன்ற காரணங்களால் மனைகளை அடையாளம் காண முடியாததால் வீடு கட்ட இயலவில்லை.
 
வீட்டுமனைகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்ககோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தாசில்தாரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நகர எல்லையிலிருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் நிலம் அமைந்துள்ளது. 25 சென்ட்டுக்கு மேலான நிலம் என்பதால் அந்த இடம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்குத்தான் மாற்றப்பட வேண்டும். அதனடிப்படையில், வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டுள்ளது என்று திருத்தணி தாசில்தார் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
 
எனவே, தாசில்தார் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். மனுதாரர்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்களுக்கான மனைகளை அளவிட்டு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பட்டாவை ரத்து செய்த திருத்தணி தாசில்தார் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.

Tags : High Court ,Thiruthani ,Dasildar ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...