பாலத்திலிருந்து காவிரியில் குதித்த பெண் மீட்பு

பள்ளிபாளையம், மே 3: குடும்ப பிரச்னை காரணமாக காவிரி பாலத்திலிருந்து ஆற்றுக்குள் குதித்த பெண்ணை மீனவர்கள் மீட்டு, போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளிபாளையம் காவிரி ஆற்று புதிய பாலத்தில், நேற்று நடந்து சென்று கொண்டிருந்த 45வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தடுப்பு சுவரை தாண்டி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ஆற்று நீரில் மூழ்காமல் தத்தளித்த அவரை, மீனவர் ஒருவர் பரிசலில் சென்று காப்பாற்றி கரை சேர்த்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பாலகிருஷ்ணன் மனைவி ராதா என்பது தெரியவந்தது. மகளிர் சுய உதவி குழுக்கள் பலவற்றில் கடன் வாங்கி, குடும்ப செலவை சமாளித்ததால், கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் மனமுடைந்து, அவர் தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்தது. மீட்கப்பட்ட பெண்ணை போலீசார் சிகிச்சைக்காக, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

Related Stories: