தேனி, மே 3: தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா வருகிற மே 10ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை நடக்க உள்ளது. விழாவிற்கான முன்னேற்பாட்டு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் முரளீதரன் தலைமை வகித்தார். எஸ்.பி பிரவீன் உமேஸ் டோங்கரே, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பாரதி, பெரியகுளம் சப்.கலெக்டர் ரிசப் மற்றும் பல்வேறுத் துறைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் முரளீதரன் பேசும்போது, திருவிழாவில் தேரின் எடைக்கு ஏற்றார்போல மின்சாரம் பாயாத பொருள்களைக் கொண்டு தேரின் வடம் தயாரிக்க வேண்டும், தேரோடும் சாலைகளை சீரமைக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.