கண்மாய் பகுதியில் பதுக்கிய 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்: அண்ணன்,தம்பிக்கு வலை

ராமநாதபுரம், மே 3: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்மாய் பகுதிக்குள் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக ராமநாதபுரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்படி எஸ்ஐ அசோக், ஏட்டுகள் குமாரசாமி முத்துகிருஷ்ணன் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். போலீசார் வருவதை பார்த்த மர்ம நபர்கள் தப்பினர். இதையடுத்து அழுந்திக்கோட்டை கண்மாய் கரை காட்டு கருவேல் மரங்களுக்கு இடையில் மூட்டை, மூட்டைகளாக அடுக்கி வைத்து தார்ப்பாய் கொண்டு மூடிவைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மூட்டைகளை பிரித்து பார்த்தபோது 3 டன் ரேசன் அரிசி, ஆயிரத்து 600 கிலோ கோதுமை இருந்தது தெரிந்தது. அந்த மூட்டைகளை கைப்பற்றிய போலீசார் திருவாடானை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டார ரேசன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கும் நாட்களில் வீடுகள் தோறும் சென்று சேகரித்த ரேசன் அரிசி, கோதுமை ஆகியவற்றை பதுக்கி வைத்துள்ளனர். இதனை கேரளாவிற்கு கடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக ஏ.புனவாசல் பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பியை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: