கணவரை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் மனைவி மனு

ஊட்டி, மே 3: கீழ்கோத்தகிரி பகுதியில் போலீசார் தாக்கி படுகாயமடைந்த கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்ககோரியும், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் எஸ்பியிடம் மனைவி மனு அளித்தார்.

கீழ்கோத்தகிரி அம்மன் நகர் பகுதியை சேர்ந்த சரண்யா, எஸ்பியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது. தற்போது 6 மாதம் கர்ப்பமாக உள்ளேன். கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி எனது கணவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் அருகே நாய் ஒன்று மலம் கழித்திருந்தது. இதனை பார்த்த எனது கணவர் சத்தம் போட்டார்.

அப்போது எங்கள் வீட்டிற்கு மேல் பகுதியில் வசித்து வரும் காவல்துறையில் பணியாற்றும் சரவணன், பிரகாஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்து எனது கணவரை கண்மூடித்தனமாக தாக்கினர். இதில், எனது கணவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே நாங்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்ல பரிந்துரைத்தனர்.

இதனை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டோம். இதுவரை சுமார் ரூ.1 லட்சம் வரை செலவாகியுள்ளது. மேலும், எனது கணவரை குணப்படுத்த ரூ.4 லட்சம் செலவாகும் என தனியார் மருத்துவமனையில் கூறிவிட்டனர்.

எனவே, சம்பந்தப்பட்ட நபர்களிடம் பணம் கேட்ட போது, பணம் தர முடியாது நீங்கள் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர். எனவே, அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவரின் அறுவை சிகிச்சைக்கு உதவிட வேண்டும்.

Related Stories: