பருவநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்த இரண்டு நாள் பணிமனை துவக்கம்

ஊட்டி, மே 3: பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் அதனை எதிர் கொள்வதற்கான கொள்கை முடிவுகளை எடுப்பது குறித்த இரண்டு நாள் பணிமனை ஊட்டியில் துவங்கியது. ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர்வளபாதுகாப்பு நிறுவனம், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மத்திய நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் இணைந்து நீர்பிடிப்புப் பகுதித் திட்டங்களில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு உத்திகள் குறித்த சர்வேதேச அளவிலான இரண்டு நாள் பணிமனை ஊட்டியில் நடக்கிறது. இந்த பணிமனை நேற்று ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் துவங்கியது. இப்பணிமனையில் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தின் இந்திய பிரதிநிதி குமார் சிக்கா கலந்து கொண்டு இரண்டு நாள் பணிமனையை துவக்கி வைத்தார். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் மோனிகா ரானே, தமிழ்நாடு வேளாண் இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மண் வளம், நீர் ஆதாரம் மற்றும் பயிர் உற்பத்தி ஆகியவற்றின் மீது பருவநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் அதனை எதிர் கொள்வது குறித்து கொள்கை முடிவுகள் எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த பணிமனையில், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி முதன்மை பொது மேலாளர் வெங்கிடகிருஷ்ணா, டேராடூன் இந்திய மண் மற்றும் நீர் வளபாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் மது, இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள், மாநில வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இன்றும் இந்த பணிமனை நடக்கிறது.

Related Stories: