×

பெரியநாயக்கன்பாளையத்தில் காட்டுப்பன்றிகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும்

பெ.நா.பாளையம், மே 3: பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்வதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி வனச்சரகரிடம் விவசாயிகள்  மனு அளித்தனர். பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த மாநிலப்பொதுச் செயலாளர் வேணுகோபால் தலைமையில் வனச்சரக அலுவலர் செல்வராஜை சந்தித்து மனுக்களை அளித்து காட்டு விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இது குறித்து வேணுகோபால் கூறியதாவது:  கோவனூர், செல்வபுரம், பன்னிமடை, சின்னத்தடாகம், பூச்சியூர், பிளிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காட்டுப்பன்றிகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்கின்றன. கடன் வாங்கிய பயிர் செய்துள்ள விவசாயிகள் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இவற்றை வனத்துறையினர் சுட்டுக் கொல்லவேண்டும். இதுமட்டுமின்றி யானைகள் தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி அழிக்கின்றன.
ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கண்டதுபோல் இப்பிரச்னைக்கும் தீர்வு காணவேண்டும். பாதிப்புகளை தடுக்கவில்லை எனில் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிடுவதோடு, கோவை மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மறியலிலும்  ஈடுபடுவோம்’’ என்றார். மாவட்டத்தலைவர் வேலுச்சாமி, கோவனூர், குப்பேபாளையம், வெள்ளமடை, பிளிச்சிக் கவுண்டனூர், மத்தம்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த பெருமாள் சாமி, மாருக்குட்டி, மணி, ராமசாமி உள்ளிட்ட விவசாயிகள் கலந்து உடன் இருந்தனர்.

Tags : Periyanayakanpalayam ,
× RELATED விற்பனைக்கு வைத்திருந்த கஞ்சா சாக்லேட்கள் பறிமுதல் ; 2 பேர் கைது