கோவை, மே 3: தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டத்தின் சார்பில் கல்லார் கிராமத்தில் கல்வி விழிப்புணர்வு விழா நடந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை ஊராட்சியில் உள்ள கல்லார் பழங்குடியினர் கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள், பெற்றோர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு விழா நடந்தது. இதனை தேசிய குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக சமூகப்பணியியல் துறை மாணவர்கள் இணைந்து நடத்தினர். இதில், பழங்குடியின மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு, ஓடந்துறை ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். பாரதியார் பல்கலைக்கழக விரிவுரையாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார்.