×

பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பெண் வார்டு உறுப்பினரின் கணவர் பங்கேற்பு: போலீசில் புகார்

திருப்போரூர்: பனங்காட்டுப்பாக்கம்  ஊராட்சி மன்ற கூட்டத்தில், பெண் வார்டு உறுப்பினரின் சார்பில் அவரது கணவர் பங்கேற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் ஒன்றியம்  பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சியில் நேற்று முன்தினம் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, (மே 1) கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன் தலைமை வகித்தார். துணை தலைவர் பார்வதி, வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களிடம் தீர்மானப் புத்தகத்தில் கையெழுத்து பெறும் பணியில் பணித்தள பொறுப்பாளர் நாகலட்சுமி ஈடுபட்டார்.

அப்போது 1வது வார்டு உறுப்பினர் ஜெய என்பவருக்கு பதிலாக, அவரது கணவர் குணசேகரன் கையெழுத்துப் போட்டதாக தெரிகிறது. அதற்கு பணித்தள பொறுப்பாளர் நாகலட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், பெண் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களது கணவர், சகோதரர் உள்பட யாரும் கலந்து கொள்ளவோ, கையொப்பமிடவோ கூடாது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார் என கூறியுள்ளார்.

அதற்கு குணசேகரன், நான் அப்படித்தான் கையொப்பம் போடுவேன். உன்னால் என்னை என்ன செய்ய முடியும் என கேட்டு அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து பணித்தள பொறுப்பாளர் நாகலட்சுமி, காயார் போலீசில் இச்சம்பவம் குறித்து நேற்று புகார் அளித்தார். மேலும், திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்திலும், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.

இதுபற்றி திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சுவிடம் கேட்டபோது, பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சியில் பெண் வார்டு உறுப்பினருக்கு பதிலாக அவரது கணவர் கலந்து கொண்டது குறித்தும், தீர்மான புத்தகங்களில் அவர் கையொப்பமிட்டது குறித்தும் புகார் பெறப்பட்டுள்ளது. புகாரின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து கலெக்டருக்கு பரிந்துரை அனுப்பியுள்ளோம். கலெக்டரின் உத்தரவு வந்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Panangattupakkam ,
× RELATED பனங்காட்டுப்பாக்கம் ஊராட்சி கிராம...