செய்யூர் அருகே கொடூர் ஊராட்சியில் திருநங்கைகளுக்கு தொகுப்பு வீடுகள்

செய்யூர், ஏப். 28: செங்கல்பட்டு மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வாழ்கின்றனர். இவர்களுக்கு தனி குடியிருப்பு பகுதிகள் இல்லாததால், அவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். ஆனால், இவர்கள் தங்கியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், திருநங்கைகள் தங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் அவர்கள், நிரந்தரமாக தங்க இடம் இல்லாமல் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர்.இந்தவேளையில், திமுக ஆட்சி பெறுப்பெற்றவுடன், திருநங்கைகள் தங்குவதற்கு நிரந்தர வசிப்பிடம் அமைத்து தர வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனர். அதனை பரிசீலனை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திருநங்கைகளின் நலன் கருதி, அவர்களுக்கு தனி குடியிருப்பு பகுதிகள் ஏற்படுத்தி தர கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் ஒன்றியம் கொடூர் ஊராட்சி ஆட்சி விளாகம் பகுதியில் 50 திருநங்கைகளுக்கு இலவச மனை பட்டா கடந்த சில மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டது. இந்நிலையில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, வேலூர் தி பிரிட்ஜ் அறக்கட்டளை, மொபிஸ் இந்தியா பவுன்டேஷன் ஆகியவை இணைந்து வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட 50 பேருக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. லத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலர் சங்கீதா வரவேற்றார். க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி செல்வம், கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் கலந்துகொண்டு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினர்.நிகழ்ச்சியில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு, மாவட்ட குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், லத்தூர் ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், பாபு, மாவட்ட துணை செயலாளர் தசரதன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல்மாலிக், விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் சூ.க.ஆதவன், புதுப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கையை ஏற்று தங்களுக்கு வீட்டுமனை வழங்கி, அங்கு தொகுப்பு வீடு கட்டி கொடுக்கும் தமிழக முதல்வருக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்தனர்.  

Related Stories: