×

எம்ஆர்பி விலையை விட கூடுதலாக விற்பனை மதுபான கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் கலால்துறை கடும் எச்சரிக்கை

புதுச்சேரி, ஏப். 28: எம்.ஆர்பி விலையை விட கூடுதலாக மதுபானங்களை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படுமென கலால்துறை எச்சரித்துள்ளது.   புதுச்சேரியில் 450க்கும் மேற்பட்ட மதுபான கடைகள், 96 சாராயக்கடைகள், 75 கள்ளு கடைகள் உள்ளன. ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனை செய்யப்படுகிறது. வெரட்டியான மது வகைகள் ஒரே இடத்தில் கிடைப்பதால், மதுபான பிரியர்கள் புதுச்சேரிக்கு படையெடுக்கின்றனர்.  சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆண், பெண் பேதமின்றி  வெளிமாநில சுற்றுலாப்பயணிகளால் மதுபான கடைகளில் கூட்டம் அலைமோதும். தற்போது அனைத்து கடைகளிலும் ஜிபே, பேடிஎம், போன்பே என டிஜிட்டல் பணப்பரிவார்த்தனை மூலமாக அதிகளவில் விற்பனை நடக்கிறது. ஒவ்வொரு மதுபானத்துக்கு கலால்துறையால் உச்சபட்ச விலை( மேக்சிமம்) நிர்ணயம் செய்திருக்கிறது.

ஆனால் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது தொடர்ந்து நடக்கிறது. உதாரணமாக ரூ. 105 மதிப்புள்ள குவார்டரை பிராண்ட் பெயருடன் கேட்டால், ரூ. 110 போட்டுவிடுங்கள் என கூடுதலாக வசூலிக்கின்றனர்.  இதனை வெளியூர்க்காரர்கள் பெரும்பாலும் கண்டு கொள்வதில்லை. உடனே டிஜிட்டல் மூலம் பணத்தை செலுத்திவிட்டு அந்த  இடத்தை காலி செய்து விடுகின்றனர். இதற்கு சரியான பில் வழங்கப்படுவதில்லை. பெரும்பாலும் யாரும் பில் கேட்காததால் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது வழக்கமாகவே மாறிவிட்டது.  இது அங்கு வேலை செய்யும் சேல்ஸ் மேன்களுக்கான உபரி வருவாயாக கிடைப்பதால் உரிமையாளர்களும் கண்டு கொள்வதில்லை.  இப்படி கூடுதல் தொகை வசூலிப்பது புதுச்சேரின் அனைத்து மதுபான கடைகளிலும் தொடர்கிறது.  இதனை தடுக்க முடிவதில்லை. இன்னும் சில கடைகளில் பில் கேட்டாலும் கிடைக்காது என்ற நிலை தொடர்கிறது. இது குறித்து கலால்துறைக்கு தொடர்ச்சியான புகார்கள் சென்றது.  இதற்கிடையே கலால்துறை துணை ஆணையர் சுதாகர் கூறுகையில், மதுபானங்களுக்கு கலால்துறை நிர்ணயித்துள்ள அதிகபட்ச விலையை விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ச்சியான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.  இது புதுச்சேரி கலால்விதிகள் 1970 மற்றும் சட்ட அளவு விதிகள்-2011க்கு எதிரானது.

இது போன்று குற்றங்களுக்கு ஊழியர்களை உரிமைதாரர்கள் காரணம் காட்டக்கூடாது. இதற்கு முழு பொறுப்பும் உரிமதாரர்களையே சாரும்.  லைசென்ஸ் வாங்கிய இடத்தில் தவறு நடந்தால், இதற்கு உரிமம் வைத்திருப்பவர்கள்தான் பொறுப்பாக முடியும்.  எனவே எப்.எல் 1 மற்றும் எப்.எல் 2 அனைத்து மதுபான கடைகளில் பணியாற்றும்  ஊழியர்கள் இது போன்று அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதலாக மதுபானங்கள் விற்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். இதனை செயல்படுத்த தவறினால்  கலால்துறை  சம்மந்தப்பட்டவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கும். சம்மந்தப்பட்ட கடையின் லைசென்ஸ் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...