பழநி காந்தி மார்க்கெட் போக்குவரத்து நெரிசலை குறைக்க தனி பைக் ஸ்டாண்ட் மாற்றி யோசிக்குமா நகராட்சி

பழநி, ஏப். 28: பழநி நகரின் மையப்பகுதியில் காந்தி மார்க்கெட் அமைந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியான காந்தி மார்க்கெட் சாலையின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இச்சாலைகளின் ஓரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல நகராட்சி சார்பில் நடைபாதை மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்நடைபாதைகள் பெரும்பாலும் தரைக்கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதற்கான வாடகைகளை அருகே இருக்கும் கடைக்காரர்கள் உள்வாடகையாக வசூலித்து வருகின்றனர் இதனால் காந்தி மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்கள் அனைவரும் தற்போது சாலைகளிலேயே நடந்து சென்று வருகின்றனர். இதுபோல் போக்குவரத்து காவல்துறை பிளாட்பராரத்தை ஒட்டி இருசக்கர வாகனங்கள் நிற்கும் வகையில் வெள்ளை கோடு போட்டு அடையாளப்படுத்தி காட்டி உள்ளது. இந்நிலையில் கடைக்காரர்கள் தங்களது கடைகள் முன்பு வாகனங்கள் நிறுத்த முடியாத வகையில் தங்களது இருசக்கர வாகனத்தை குறுக்கு நெடுக்கமாக நிறுத்தி விடுகின்றனர். மேலும், சாலையின் நடுவில் இரும்பு கம்பிகளை போட்டு வைத்து விடுகின்றனர். இதனால் சாலையில் நடந்து செல்பவர்கள் தடுக்கி விழுந்து காயமடைகின்றனர். இதனை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் காந்தி மார்க்கெட்டில் உள்ள ராமராஜ் சாலையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு பைக், சைக்கிள் போன்ற வாகனங்களை நிறுத்த வழிவகை செய்யலாம். சுமார் 20 அடி அகலம் இச்சாலை தற்போது ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி ஒற்றையடி பாதையாக மாறி உள்ளது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் காந்தி மார்க்கெட் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும் வாய்ப்பு உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: