கோவை கங்கா மருத்துவமனையில் `புராஜக்ட் சக்தி, புராஜக்ட் வால்க்’ திட்டம் துவக்கம்

கோவை, ஏப்.28: கோவை கங்கா மருத்துவமனை மற்றும் கோவை மெட்ரோபாலிஸ் ரோட்டரி கிளப் இணைந்து, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ ``புராஜக்ட் சக்தி’’ என்னும் திட்டம், சர்க்கரை நோயாளிகளுக்கு உதவ  ‘’புராஜக்ட் வால்க் பார் லைப்’’ என்னும் திட்டம் ஆகிய இரு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா கங்கா மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. மருத்துவமனை தலைவர் டாக்டர் சண்முகநாதன் தலைமை தாங்கினார். இயக்குனர்கள் டாக்டர் ராஜசபாபதி, டாக்டர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் இத்திட்டத்தை துவக்கிவைத்தார். இத்திட்டத்தின்கீழ் அதிநவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட, பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து மூலம் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்து, பெண்களின் மார்பக புற்றுநோயை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து பேராபத்தை தடுத்தல், சர்க்கரை நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கால் இழப்பை தடுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுபற்றி டாக்டர் ராஜ சபாபதி கூறுகையில்,``சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டால், பாதத்தின் உணர்ச்சிகளை அறிய முடியவில்லை. அதனால், கால் புண் ஏற்பட்டு, அது முற்றிப்போய், கால் துண்டிக்கப்படும் அளவுக்கு செல்கிறது. இத்திட்டத்தின்கீழ் முதல்கட்டமாக 1,800 சர்க்கரை நோயாளிகளுக்கு உடல்பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜா சண்முககிருஷ்ணன் கூறுகையில், ``இந்தியாவில் பெண்கள் அதிகளவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். கடைசி நேரத்தில் இந்நோயை கண்டறிவதால் காப்பாற்ற முடியாமல் போகிறது. இந்த உயிரிழப்பை தடுக்க இத்திட்டம் உதவும். இத்திட்டத்தின்கீழ் 18 மாதத்தில் 1,500 பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றார். இந்நிகழ்ச்சியில், பரத் பாண்டியா, பிரிக்கால் தலைவர் வனிதா மோகன், மில்கி மிஸ்ட் இயக்குனர் அனிதா சதீஷ்குமார், வக்கீல் சுந்தரவடிவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: