×

தண்டு மாரியம்மன் கோயிலில் தீச்சட்டி ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன்

கோவை, ஏப்.28: கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் நேற்று காலை தீச்சட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.கோவை அவிநாசி சாலையில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சித்திரை விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத்தொடர்ந்து, தினமும் சிறப்பு பூஜைகள், தீபாராதனை, அபிஷேகம் நடைபெற்றது. 25ம் தேதி திருவிளக்கு வழிபாடு பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் மாலையில் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் மற்றும் அம்மன் மலர் பல்லக்கில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீச்சட்டி ஊர்வலம் நேற்று காலை 7 மணிக்கு கோனியம்மன் கோயிலில் இருந்து துவங்கியது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக பங்கேற்று தீச்சட்டி ஏந்தி சென்றனர். இந்த ஊர்வலமானது கோனியம்மன் கோயிலில் தொடங்கி டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்ப செட்டி தெரு, சிரியன்சர்ச் ரோடு, புரூக்பாண்ட் ரோடு சென்று அவிநாசி ரோடு மேம்பாலம் கீழ் பகுதி, நஞ்சப்பா ரோடு வழியாக தண்டுமாரியம்மன் கோயில் வந்தடைந்தது. தீச்சட்டி ஊர்வலத்தை முன்னிட்டு நகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இன்று காலை 11 மணி அளவில் மஞ்சள் நீர் நிகழ்வும், மாலை 7 மணிக்கு கொடியிறக்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 1ம் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.

Tags : Tandu Mariamman Temple ,
× RELATED கோவை தண்டு மாரியம்மன் கோயிலில்...