கோடை வெயில் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?

புதுக்கோட்டை, ஏப். 28: புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் வெயில் உஷ்னம் தாங்க முடியாமல் சிரமமான நிலையில் நேரத்தை கடத்தி வருகின்றனர். இதனால் வெயில் கால நோய்கள் வரலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து மருத்துவர்கள் கூறியிருப்பதாவது: பருவ மாற்றத்தின் காரணமாக கோடை காலத்தில் வெயிலின் அதிகபட்ச தாக்கத்தினால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து கொள்ள உரிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கோடை வெயில் காலங்களில் பொதுமக்கள் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாதவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகளவில் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக கோடை வெயில் நேரங்களில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை அவசியம் இல்லாத சூழ்நிலையில் சூரிய வெப்பத்தில் வெளியே செல்வதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். உடலில் ஹைட்டேட்டுகளை தவிர்க்க டீ, காபி, மது மற்றும் கார்பனேட் மென்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கோடை வெயில் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க நண்பகல் வேலைகளில் வெளியில் செல்ல அனுமதிக்க கூடாது. மேலும் இல்லத்தரசிகள் சமையல் பணிகளை பெரும்பாலும் நண்பகலில் செய்வதை தவிர்க்க வேண்டும். சமையலறையை காற்றோட்டம் உள்ளதாக வைத்து கொள்ள வேண்டும். எலுமிச்சைச்சாறு, மோர் முதலியவற்றை தேவையான அளவு எடுத்து கொள்ள வேண்டும். இரவில் காற்றோட்டம் உள்ள அறைகளில் படுத்து உறங்குதல், மண்பானைகளில் குடிநீர் பயன்படுத்துதல் வேண்டும். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியோர்கள் சோர்வாக இருந்தால் உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அனைத்து மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் ஊரக சுகாதார மையங்கள் ஆகியவைகளின் வெப்ப கால நோய்தடுப்பு குறித்த விளம்பரங்கள் வைப்பதுடன் உள்நோயாளிகளுக்கான காற்றோட்டமான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வெயில் காலம் என்பதால் மக்கள் பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும். பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். தர்பூசணி உள்ளிட்ட பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். தினசரி தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும். அப்போது தான் நீர் சத்து குறையாமல் இருக்கும். உடலில் ஏதாவது மாற்றம் இருந்தால் சுய மருத்துவம் செய்யாமல் அருகில் உள்ள மருத்துவர்களை அணுகி சரி செய்து கொள்ள வேண்டும் என்றனர்.

Related Stories: