×

ஈபிஎப் கணக்கில் மோசடி கண்டித்து ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிபுறக்கணிப்பு, தர்ணா

பெரம்பலூர், ஏப்.28: பெரம்பலூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் 231 ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தங்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் ஈபிஎப் தொகையை கணக்கில் வரவு வைக்கப்படாததை கண்டித்து நேற்று நகராட்சி அலுவலகம் முன் தர்ணா போராட்டம் நடத்தினர். பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 231 தூய்மை பணியாளர்களுக்கு, பிராவிடண்ட் பண்ட் என்ற ஈபிஎப் தொகை மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்கின்றனர். ஆனால் அதை கணக்கில் காட்டப்படாமல் உள்ளது. இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஒப்பந்த நிர்வாகம் ஈபி.எப் நிலுவைத் தொகை நபர் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 400 ரூபாய் பாக்கி வைத்து உள்ளது. இதில் நகராட்சியில் பணிபுரியும் மொத்தம் 231 தூய்மை பணியாளர்களின் மொத்த தொகையான 3 கோடியே 24 லட்சத்து 32 ஆயிரத்து 400 ரூபாய் மோசடி செய்ததாக தெரிய வருகிறது. இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால் முறையான பதில் தெரிவிக்கவில்லை. எனவே தூய்மைப் பணியாளர்களின் இந்த ஈபிஎப் தொகையை கணக்கில் வரவு வைக்க வேண்டும், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக கலெக்டர் அறிவித்த 580 ரூபாய் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பணிப் புறக்கணிப்பு செய்து, நகராட்சி அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை நகராட்சி ஆணையர் குமரி மன்னன், அழைத்து பேசி, ஒப்பந்தக்காரை நேரில் வரவைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம் என உறுதியளித்ததை யொட்டி கலைந்து பணிக்கு சென்றனர்.

Tags : Dharna ,
× RELATED வாக்காளர்களுக்கு பாஜ பணம் பட்டுவாடா...