×

நாகர்கோவிலில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்த 150 பேர் கைது மண்டபத்தில் உண்ணாவிரதம் - பெண்கள் மயக்கம்

நாகர்கோவில்,ஏப்.28: நாகர்கோவிலில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட வந்த பொதுமக்கள் 150 பேரை போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நீர்நிலை புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளை அகற்றுவதில் அரசாணையை அதிகாரிகள் முறையாகப் பின்பற்றுவதில்லை என கூறி திருப்பதிசாரம், கீழ தத்தையார் குளம், நுள்ளிக்குளம், தாழக்குடி தோப்பூர், தாழக்குடி உள்பட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் நாகர்கோவிலில் அம்பேத்கர் சிலை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று (27ம்தேதி) நாகர்கோவிலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து நேற்று காலை முதல் பொதுப்பணித்துறை அலுவலகத்தை சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் வேப்பமூடு சந்திப்பு, அண்ணா பஸ் நிலையம், கோர்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 11 மணியளவில் அண்ணா பஸ் நிலையம் அருகில் குவிந்த பொதுமக்கள் அங்கிருந்து ஊர்வலமாக பொதுப்பணித்துறை அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், நிலம் எங்கள் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜவகர் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். அவர்களை டி.எஸ்.பி. நவீன்குமார் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்ல மறுத்ததால் கைது செய்தனர். 130 பெண்கள் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். நாகர்கோவில் செட்டிக்குளத்தில் உள்ள மண்டபத்தில் கைதானவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.  அவர்களுக்கு காவல்துறையினர் மதிய உணவு வழங்கினர். ஆனால் பொதுமக்கள் உணவு உட்கொள்ள மறுத்தனர். கடந்த 25ம் தேதி அம்பேத்கர் சிலை முன் நடந்த போராட்டத்தின் போது அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வர வில்லை.

தற்போது கைதாகி அடைக்கப்பட்டுள்ள மண்டபத்துக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வர வில்லை. எனவே மக்களின் கோரிக்கைகளை புறந்தள்ளும் அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறினர். இதற்கிடையே உணவு உண்ண மறுத்த பெண்கள் சிலர் அடுத்தடுத்து மயங்கினர்.  இதனால் ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்களில் ஏற்றி அந்த பெண்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலம் எங்கள் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜவகர் கூறுகையில், குளம் புறம்போக்கு ஆக்ரமிப்பு சட்டம் 2007 பிரிவு 12 ன் படி பட்டா வழங்க வழி வகை இருந்தும், ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க அரசு உத்தரவு பிறப்பித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. அரசாணை உத்தரவு 465 ன்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்காமல் வருவாய் துறையினரும், பொதுப்பணித்துறையினரும் செயல்பட்டு வருகிறார்கள். தற்போது போதிய கால அவகாசம் இருந்தும், அதிகாரிகள் அவசர, அவசரமாக வீடுகளை இடிக்கிறார்கள். அரசின் உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. எனவே நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார்.

Tags : Public Works Department ,Nagercoil ,
× RELATED 300 ஏக்கர் விழல்கள் எரிந்து நாசம்