கன்னியாகுமரியில் நடந்த கேரள கவர்னர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு

கன்னியாகுமரி, ஏப்.28: கன்னியாகுமரியில்  கேரள கவர்னர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின சார்பில் நவீன விவசாய கருத்தரங்கு நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த கருத்தரங்கை துவக்கி வைத்து கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பேசினார். இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக தேசிய கீதமே பாடப்பட்டது. அதேபோல் நிகழ்ச்சி நிறைவிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. ஒரே நிகழ்ச்சியில் இரண்டு முறையும் தேசிய கீதம் பாடப்பட்ட நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப் படாதது ஏன்? என நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது நிகழ்ச்சி நிரல் முழுவதுமே கேரள கவர்னர் அலுவலக அதிகாரிகள் தான் முடிவு செய்து  அவர்களால் இறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் எங்களால் அதில் எதுவும் மாற்றம் செய்ய இயலாமல் போனது என்று அவர்கள் கூறினர். தமிழகத்தில் பொது அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியும் கேரள கவர்னர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது தமிழ் ஆர்வலர்களிடம் மிகுந்த வருத்தத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் கன்னியாகுமரியில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நவீன விவசாயத்திற்கான 45 நாள் கருத்தரங்கை தொடங்கி  வைத்து கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் பேசியதாவது:

விவசாயத்துறை தற்போது பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உலகமயமாக்கல் பருவநிலை மாற்றம் போன்ற காரணங்கள் விவசாயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் ஏராளமான மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். எனவே இத்தொழிலை மேம்படுத்தவும் நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கவும் விவசாயிகள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும். விவசாயத் தொழிலிலும் சந்தைப்படுத்துதலிலும் புதிய நவீன தொழில்நுட்பம் மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகள் வேலை செய்பவர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல் ஏராளமான மக்களுக்கு வேலை அளிப்பவர்கள் ஆக மாற வேண்டும். அரசும், நிதி நிறுவனங்களும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்துகின்றன. அவற்றை விவசாயிகள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக முன்னாள் ஐ.நா சபையின் பொருளாதார ஆலோசகர் டாக்டர் ஜெபமாலை வினாஞ்சி ஆராய்ச்சி வரவேற்றார். தொண்டு நிறுவன இயக்குனர் டாக்டர் அனிலா கிறிஸ்டி நன்றி கூறினார்.

Related Stories: