வாலிபர் கொலையில் 10 பேர் கைது தியேட்டரில் ஏற்பட்ட மோதல் காரணமாக தீர்த்துக்கட்டினோம்: பரபரப்பு வாக்குமூலம்

அம்பத்தூர்: அம்பத்தூர் சிவானந்தா நகரை சேர்ந்தவர் கார்த்திக் (எ) லோகேஷ் (27). அதே பகுதியில் உள்ள எலக்ட்ரிக்கல் கம்பெனியில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் கார்த்திக், அம்பத்தூர் தொழிற்பேட்டை நியூகாலனி வழியாக தனது தம்பி வெங்கடேசுடன் (21), வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 10 பேர், லோகேஷை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

 இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், திருவேற்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், கொலையாளிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் அங்கு சென்று, ஓட்டலில் பதுக்கியிருந்த 10 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை, காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், அன்னை சத்யா நகரை சேர்ந்த லாசர், சண்முகம், சதீஷ், சிற்றரசு, நரேந்திரன், விஷ்ணு, தனசேகர், மணிகண்டன், சக்தி மற்றும் ஒரு சிறுவன் என தெரிந்தது. மேலும் விசாரணையில், கடந்த ஒரு வாரத்துக்கு முன் லோகேஷ், தனது தம்பி வெங்கடேசுடன்  அம்பத்தூரில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க சென்றார்.

அப்போது, அவர்களுக்கும் அன்னை சத்யா நகரை சேர்ந்த சதீஷ், லாசர், சண்முகம், நரேந்திரன் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. அப்போது, சதீஷை லோகேஷ் அடித்துள்ளார். இதனால், முன்விரோதம் ஏற்பட்டு, லோகேஷை கொலை செய்ய அவர்கள் திட்டம் தீட்டினர். அதன்படி சதீஷ், லாசர், சண்முகம் மற்றும் நரேந்திரன் ஆகியோர் தங்களது கூட்டாளிகளான சிற்றரசு, விஷ்ணு, தனசேகர், மணிகண்டன், சக்தி மற்றும் ஒரு சிறுவனுடன் சேர்ந்து, ேலாகேஷை வெட்டிக் கொன்றது தெரிந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 10 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். மற்ற 9 பேரை  சிறையில் அடைத்தனர்.

Related Stories: