×

அம்மையார்குப்பம் ஊராட்சியில் சுப்ரமணியர் கோயில் குளம் விரைவில் சீரமைக்கப்படும்: ஒன்றிய பொறியாளர் தகவல்

பள்ளிப்பட்டு: அம்மையார்குப்பம் ஊராட்சியில் உள்ள சுப்ரமணியர் கோயில் குளம் விரைவில் சீரமைத்து, நடபைாதை அமைத்து பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வசதிகள் செய்து தரப்படும் என ஒன்றிய பொறியாளர் சுந்தரம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியம் அம்மையார்குப்பம் ஊராட்சியில் சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. அருகில் உள்ள குளத்தை சுற்றி முட்புதர்கள் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது.

மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் விடப்பட்டது. சிலர், குளக்கரையை கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், குளத்தை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு கோரிக்கை வைத்தனர். இதைதொடர்ந்து, திமுக அரசு மீண்டும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கொண்டு வந்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்திட்டத்தில், சுப்ரமணியர் கோயில் குளம் தூர்வாரி சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டி, குளம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செங்குட்டுவன் முன்னிலையில், ஒன்றிய பொறியாளர் சுந்தரம் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், விரைவில் குளத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி, முழுவதும் தூர்வாரி குளக்கரையை வலுப்படுத்தி பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு வசதிகள் செய்து தரப்படும் என்றார்.

Tags : Subramanian temple ,Ammaiyarkuppam ,Union Engineer Information ,
× RELATED ஆர்.கே.பேட்டை அருகே அம்மையார்குப்பம்...