திருவாரூர் வட்டார அளவில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

திருவாரூர், ஏப்.26: திருவாரூர் வட்டார அளவிலான மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நடைபெற்ற மருத்துவ மதிப்பீட்டு முகாமினை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் துவக்கி வைத்தார். திருவாரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிதுறை சார்பில் பிறந்த குழந்தை முதல் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் திருவாரூர் கந்தப்பமடத்தெருவில் உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் முகாமை துவக்கிவைத்து பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வேண்டுவோர், உதவி உபகரணங்களான மூன்று சக்கர வண்டி, சக்கர நாற்காலி, காதொலி கருவி, நடைபயிற்று வண்டி, கை, கால் செயற்கை அவயங்களுக்கான காலிப்பர்கள், கல்வி உதவித்தொகை மற்றும் இலவச அறுவை சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கும் மற்றும் மருத்துவ உதவி கிடைக்கவும் இந்த மதிப்பீட்டு முகாம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதில் கண், காது, மூக்கு, தொண்டை, வாய், எலும்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கலந்துகொண்டு இந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். அதன்படி, திருவாரூர் வட்டாரத்தில் மட்டும் மொத்தம் 399 குழந்தைகள் இருப்பது கணக்கெடுக்கப்பட்டு இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். முகாமில் முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா, மாவட்ட கல்வி அலுவலர் பார்த்தசாரதி, உதவி திட்ட அலுவலர் பாலசுப்ரமணியன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், நகராட்சி துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: