திருவாரூர் வழக்கறிஞர்கள் சங்க சிறப்பு கூட்டம்

திருவாரூர், ஏப்.26: வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தியுள்ள தமிழக முதல்வருக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். திருவாரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சிறப்பு கூட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க அறையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். அரசு வழக்கறிஞர்கள் மணிவண்ணன், கண்ணன், சுதாகரன் மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்களின் நீண்டநாள் கோரிக்கையான சேமநல நிதியினை ரூ.7 லட்சத்திலிருந்து ரூ 10 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன் வழக்கறிஞர்கள் மத்தியில் இந்த அறிவிப்பானது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதால் அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மூத்த வழக்கறிஞர்களான கோபாலகிருஷ்ணன், முத்தையன், மணிகண்ணன், ஐயப்பன், மூவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் தினேஷ் வரவேற்றார். பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Related Stories: