கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எல்லையோரமுள்ள அடுத்த மாவட்ட பகுதி குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தல்

கொள்ளிடம், ஏப்.26: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் எல்லையோரம் உள்ள அடுத்த மாவட்ட குழந்தைகளையும் பள்ளிகளில் சேர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. இங்குள்ள அரசுப்பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் அரசின் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களிலிருந்து வந்து வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கும் முழுமையான வாய்ப்பு அளிக்கப்பட்டு கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பம் தெரிவிக்கும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சாதாரணமாக சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.

ஆனால் தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டு எல்கேஜி முதல் உயர்நிலைப்பள்ளி கல்வி வரை அரசால் இலவச கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் கீழ் பயில விரும்பும் குழந்தைகளின் பெற்றோர் தற்போது இணையதளத்தின் மூலம் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கொள்ளிடம் பகுதி மாவட்டத்தையும் மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லை பகுதியையும் சந்திக்கும் இடமாக இருந்து வருகிறது. கொள்ளிடத்தில் இருந்து கடலூர் மாவட்ட எல்லை அரை கி.மீ. தூரத்தில் மட்டுமே உள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் கடலூர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு சிதம்பரத்திலுள்ள பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாய நிலை உள்ளது. சிதம்பரத்திலுள்ள பள்ளிகளுக்கு செல்ல 8 கி.மீ. தூரமும் அங்கிருந்து கொள்ளிடத்திற்கு வந்து கொள்ளிடத்தில் உள்ள பள்ளிகளுக்கு வந்து செல்வதற்கு வெறும் அரை கி.மீ. தூரம் மட்டுமே உள்ளது.

குறைந்த தூரத்தில் கொள்ளிடத்தில் உள்ள பள்ளிகளில் கடலூர் மாவட்டத்தின் எல்லையோர கிராமங்களை சேர்ந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

ஆனால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி கொள்ளிடம் மற்றும் கொள்ளிடம் பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளில் இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளை சேர்க்க மறுத்து வருகின்றனர். இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை சிதம்பரத்திற்கு சென்று அங்குள்ள பள்ளிகளுக்கு செல்ல விரும்பவில்லை. குழந்தைகளின் பாதுகாப்பை கருதி மயிலாடுதுறை மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள கொள்ளிடம் பகுதியிலுள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து கொள்ளிடம் சமூக ஆர்வலரும் ஒன்றியக் குழு உறுப்பினருமான அங்குதன் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Stories: