வாய்க்கால்கள் தூர்வாரும் பணி ஜூன் முதல் வாரத்தில் காவிரியில் தண்ணீர் வருவதற்குள் முடிந்துவிடும்

தரங்கம்பாடி, ஏப்.26: மயிலாடுதுறை மாவட்டத்தில், காவிரி வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணி ஜூன் முதல் வாரத்தில் காவிரியில் தண்ணீர் வருவதற்குள் முடிந்துவிடும் என்று கலெக்டர் லலிதா தெரிவித்தார். முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் சிறப்பு தூர்வாரும் பணி துவக்கி வைக்கபட்டது. தரங்கம்பாடி அருகே பாலூர் கிராமத்தில் சிறப்பு தூர்வாரும் பணியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் முன்னிலையில் மயிலாடுதுறை கலெக்டர் லலிதா துவக்கி வைத்தார். தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மயிலாடுதுறை மாவட்டம், காவிரி வடிநில கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் 862.25 கி.மீ தூரத்திற்கு 8 கோடியே 70 லட்சம் செலவில் 49 பணிகள் நடைபெற உள்ளன.

இப்பணிகள் அனைத்தும் முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க காவிரியில் தண்ணீர் வருவதற்கு முன்பாக ஜூன் முதல் வாரத்தில் முடிக்கப்படும். இப்பணிக்காக 70 இயந்திரங்கள் 2 ஷிப்டாக பணி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு தூர்வாரப்பட்ட எந்த வாய்காலும் தற்போது எடுத்து கொள்ளப்படவில்லை. 49 பணிகளையும் கண்காணிக்க 49 வேளாண்மை உழவர் குழு அமைக்கபட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், வேளாண் இணை இயக்குநர் சேகர், செம்பனார்கோவில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி தர், எடுத்துகட்டி ஊராட்சி மன்ற தலைவர் பைலட் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: