நாகர்கோவிலில் ஜவுளி கடையில் பயங்கர தீ பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்

நாகர்கோவில், ஏப்.26 : நாகர்கோவில் பீச்ரோட்டில் பிரபல ஜவுளி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பல் ஆனது. நாகர்கோவில் செட்டிகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் லிஜின் (30). இவர் பீச் ரோடு ஜங்ஷன் பகுதியில் ஆண்களுக்கான பிரத்யேகமாக துணிக்கடை  வைத்துள்ளார். நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று அதிகாலை கடையில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் லிஜினுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கடைக்குள் பயங்கர தீ எரிந்து கொண்டிருந்தது.

உடனடியாக கடையின் ஷட்டரை உடைத்து கடையை திறந்தனர். மேலும் வெளிப்புற ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து தீயை  அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த ஜவுளி கடை தரை தளம் மற்றும் இரு தளங்களை ெகாண்ட கட்டிடம் ஆகும். முதல் தளத்தில் ஜவுளி கடை உள்ளது. 2ம் தளத்தில் தனியார் வங்கி உள்ளது. இதையடுத்து அந்த வங்கி அலுவலகத்தையும் திறந்து தீ பரவி உள்ளதா? என ஆய்வு செய்தனர். ஆனால் அங்கு எந்த சேதமும் இல்லை.

இந்த தீ விபத்தில் ஜவுளி கடையில் இருந்த துணிமணிகள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு உடனடியாக தெரிய வில்லை. பல லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து அறிந்ததும் கோட்டார் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்து இருக்குமா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதிகாலை 3 மணியளவில் புகை வந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் அந்த பகுதியில் திரண்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே தீ விபத்து நிகழ்ந்த ஜவுளி கடையை மேயர் மகேஷ் நேற்று பார்வையிட்டார். அவருடன் துணை மேயர் மேரி பிரின்சி லதா மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் சென்று இருந்தனர்.

Related Stories: