லைசென்ஸ் இன்ஜினியர் உரிமம் பெற்ற சுற்றுசூழல் பொறியாளர்களை உருவாக்க வேண்டும்: பேரவையில் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் வனம், சுற்றுச்சூழல், விளையாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி (விசிக) பேசியதாவது: இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதல்ல முக்கியம். அதைவிட அவர்களது கல்வி தகுதிக்கேற்ப, அவர்களின் தன்மானத்தை காக்க படித்த பல்லாயிரக்கணக்கான சிவில் இன்ஜினியர், மெக்கானிக் இன்ஜினிரியர்களும் வேலை வாய்ப்பின்றி இருக்கும் சூழலில், தொழிற்சாலைகளில் அனைத்துவித கழிவுநீர் சுத்திகரிப்பு, காற்று மாசு கட்டுப்பாடு, இதர மாசுக்கட்டுப்பாடு செயல்பாடுகளை மேற்பார்வையிட அதற்கென பொறியாளர்களை நியமிக்க வேண்டும்.

மாசு கட்டுப்பாடு பணிகளை அரசு மேற்பார்வையிட  லைசென்ஸ் இன்ஜினியர்ஸ் உரிமம் பெற்ற சுற்றுச்சூழல் பொறியாளர்களை உருவாக்க வேண்டும். கழிவுநீர் கையாளும் விதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு, அனைத்து பகுதிகளிலும் ஓடும் கழிவுநீர் லாரிகளை முறையாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் பதிவு செய்ய வேண்டும். தேவைப்படும் இடங்களில் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். கடந்தாண்டு மானிய கோரிக்கை அறிவிப்பில் உறுதியளிக்கப்பட்ட தேயிலை தோட்ட தொழிலாளர் 7வது ஊதியக்குழு பரிந்துரை ஊதிய உயர்வு இன்னும் வழங்கவில்லை. முதல்வர் அதை கருணையோடு வழங்க வேண்டும்.

வனத்துறையில் இந்திய வனப் பணியிடங்களில் 45 இடங்கள், தமிழக வனப்பணியில் இருப்பவர்களால் பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். இதனை உடனே நிரப்ப வேண்டும்.  முக்கியமாக பல அடுக்குமாடி குடியிருப்புகள் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு நிறுவாமல் அல்லது உரிய கொள்ளவு கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு இல்லாமல் உள்ளது. உடனடியாக மாநிலம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இந்த அமைப்பை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: