×

மாணவர்களுக்கு விடுதி வாழ்க்கை சிறந்த பண்புகளை வளர்க்க உதவும் துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பேச்சு

காரைக்குடி, ஏப்.26: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பட்டமேற்படிப்பு ஆண்கள் விடுதி நாள் விழா கொண்டாடப்பட்டது. விடுதிகாப்பாளர் நடராஜன் வரவேற்றார். துணைவேந்தர் பொறுப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர் கருப்புச்சாமி தலைமை வகித்து பேசுகையில், கல்லூரி கால பருவத்தை மாணவர்கள் ஒருமித்த வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தேடலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வெறும் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வல்லுநர்களாகவும், இலக்கியவாதிகளாகவும், சமூக பொறுப்பு உள்ளவர்களாகவும், நிர்வாகிகளாகவும் உருவாக வேண்டும்.

விடுதியில் தங்கி படிக்கும் போது சிறந்த நண்பர்கள் கிடைப்பார்கள். பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுடன் சேர்ந்து தங்கும்போது பல தரப்பட்ட கலாச்சாரம், பண்பாட்டை தெரிந்து கொள்ள முடியும். தலைமைப்பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும் சிறந்த முடிவுகளை எடுப்பதற்கும், மன வலிமை, சொந்த காலில் நிற்பது போன்ற சிறந்த பண்புகளை பெற விடுதி வாழ்க்கை வழிவகுக்கிறது.

விடுதியில் தங்குவதால் சேமிக்கும் நேரத்தை மாணவர்கள் ஆக்கபூர்வமாக பயன்படுத்த வேண்டும். மாணவர்களின் மென்திறன்களை மட்டுமின்றி தலைமை பண்புக்கான குணங்களை வளர்க்கும் இடமாக விடுதிகள் உள்ளன என்றார்.
ஆட்சிமன்ற குழு உறுப்பினர் குணசேகரன், மாணவர் நலன் முதன்மையர் பேராசிரியர் பழனிச்சாமி, பல்கலைக்கழக விடுதிகளின் முதன்மை காப்பாளர் பேராசிரியர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விடுதி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. துணை விடுதி காப்பாளர் கவுரிசங்கர் நன்றி கூறினார்.

Tags : Vice ,Chancellor ,Responsibility Committee ,
× RELATED புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்