திருப்பூர், ஏப். 25: பொதுமக்களின் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய கிராமசபை கூட்டம் உறுதுணையாக இருக்கும் என, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் அய்யப்பாநகரில் பகுதி நேர ரேஷன் கடையை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். இதன் பின்னர் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்து வருகிறது. காங்கேயம் கணபதிபாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் நானும், மாவட்ட கலெக்டர் பொங்கலூர் ஒன்றியம் காட்டூர் பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் பங்கேற்றோம். தற்போது பொங்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பாநகரில் பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் பெறக்கூடிய வகையில் இந்த கடை திறக்கப்பட்டுள்ளது. இதுபோல் தேவைப்படுகிற இடங்களில் எல்லாம் கடைகள் திறக்கப்படும்.