மக்களின் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய கிராமசபை கூட்டம் உறுதுணையாக இருக்கும்

திருப்பூர், ஏப். 25: பொதுமக்களின் பிரச்னைகளை நிவர்த்தி செய்ய கிராமசபை கூட்டம் உறுதுணையாக இருக்கும் என, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார். திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம் அய்யப்பாநகரில் பகுதி நேர ரேஷன் கடையை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். இதன் பின்னர் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்து வருகிறது. காங்கேயம் கணபதிபாளையத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் நானும், மாவட்ட கலெக்டர் பொங்கலூர் ஒன்றியம் காட்டூர் பகுதியில் நடந்த கிராம சபை கூட்டத்திலும் பங்கேற்றோம். தற்போது பொங்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பாநகரில் பகுதிநேர ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் பெறக்கூடிய வகையில் இந்த கடை திறக்கப்பட்டுள்ளது. இதுபோல் தேவைப்படுகிற இடங்களில் எல்லாம் கடைகள் திறக்கப்படும்.

புதியதாக இதற்காக கட்டிடம் கட்ட நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் முன்வந்தால் பங்குத்தொகையை பெற்றுக்கொண்டு விரைவாக கட்டிடத்தை கட்டலாம் என கலெக்டர் தெரிவித்தார். இது நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். கிராம ஊராட்சிகளை பொறுத்தவரை ஆண்டுக்கு 6 முறை என்கிற வகையில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில் மக்கள் தங்களின் கருத்துகள், தங்களது பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை எடுத்துக்கூறி நிவர்த்தி செய்ய கிராமசபை கூட்டம் உறுதுணையாக இருக்கும். பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவும் கிராமசபை கூட்டம் உதவும்.  இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி 4-ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார், துணைத்தலைவர் அபிராமி, பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: