திருக்காட்டுப்பள்ளியில் ஜூன் 3ம்தேதி அரசுகலை அறிவியல் கல்லூரி திறக்க நடவடிக்கை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேட்டி

திருக்காட்டுப்பள்ளி, ஏப். 25: திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமையுள்ள இடத்தை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ஜூன் 3ம் தேதி கல்லூரி திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் வரும் கல்வியாண்டில் 10 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதில் திருக்காட்டுப்பள்ளியில் ஒரு கல்லூரி அமைய உள்ளதாகவும் தெரிவித்தார் . இந்நிலையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு கொறடா செழியன், திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் ,பூதலூர் ஒன்றிய குழு தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் திருக்காட்டுப்பள்ளி அருகே சிவசாமிபுரத்திலுள்ள இடத்தை பார்வையிட்டதுடன் பூதலூரில் உள்ள பழைய ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய சேவை மையம் ஆகியவற்றை பார்வையிட்ட அமைச்சர் நிருபர்களிடம் கூறுகையில், கலைஞரின் பிறந்த தினமான வரும் ஜூன் 3ம் தேதி திருக்காட்டுப்பள்ளியில் கல்லூரி திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார் .இதில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, பூதலூர் தாசில்தார் பிரேமா, திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி தலைவர் மெய்யழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: