திண்டிவனம் அருகே தீவிபத்து: 9 ஏக்கர் தைலம் தோப்பு எரிந்து நாசம்

திண்டிவனம், ஏப். 25: திண்டிவனம் அருகே மர்மமான முறையில் ஏற்பட்ட தீவிபத்தால் 9 ஏக்கர் தைலம் தோப்பு எரிந்து நாசமானது. திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே அஜித் என்பவருக்கு சொந்தமான 9 ஏக்கர் தைலம் தோப்பு உள்ளது. இந்த தோப்பு நேற்று மாலை மர்மமான முறையில் தீப்பற்றி எரிய தொடங்கியது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென பரவி எரிந்தது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் மயிலம் காவல் நிலையம் மற்றும் திண்டிவனம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தைலம்தோப்பு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்களால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தைலம் தோப்பு முழுவதும் எரிந்து நாசமானது. தீ விபத்து ஏற்பட்டது குறித்து மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: