விருதுநகர் மருத்துவக்கல்லூரியில் ட்ரோமா கேர் மருத்துவமனை அமைக்க வேண்டும்: சட்டமன்றத்தில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் கோரிக்கை

விருதுநகர், ஏப். 23: நான்குவழிச்சாலை விபத்துக்களில் உயிர்களை காப்பற்ற, விருதுநகர் மருத்துவக்கல்லூரி அருகில் தலைக்காய சிகிச்சை பிரிவு (ட்ரோமா கேர்) அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் தெரிவித்தார். விருதுநகர் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் சட்டமன்ற கூட்டத்தில் பேசுகையில், தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருட்கள் விலை உயர்வால் விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. மூலப்பொருட்கள் விலையேற்றத்தை குறைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாக தெரிவித்தார். விருதுநகரில் பல் மருத்துவக்கல்லூரி துவக்க அரசாணை பிறப்பித்து ஆண்டுகளாகியும் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. பல் மருத்துவக் கல்லூரியை விரைவில் கொண்டு வர வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள நிலையில், நான்குவழிச்சாலை விபத்துக்களில் உயிர்களை காப்பற்ற மருத்துவக்கல்லூரி அருகில் தலைக்காய சிகிச்சை பிரிவு (ட்ரோமா கேர்) அமைக்க வேண்டும். ஆனைக்குட்டம் நீர் தேக்க ஷட்டர்கள் சரிவர இயங்காத நிலை உள்ளது. மழைநீரை தேக்கி, குடிநீர் மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்ய ஷர்ட்டரை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர் பாதாளச்சாக்கடை பணிகள் முடிந்து நகராட்சியிடம் ஒப்படைத்து 2 ஆண்டுகளாகி விட்டன. ஆனால் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு வந்து சேரவில்லை. திறந்த வெளியில் கழிவுநீர் செல்கிறது. பாதாளச்சாக்கடை திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டும். கவுசிகா ஆற்றில் பழைய சிவகாசி ரோட்டில் மேல்மட்ட பாலம் அமைக்க வேண்டும். கட்டனார்பட்டி, முத்துலிங்காபுரம், கலெக்டர் அலுவலகம் பகுதியில் மேல்மட்ட பாலம் கட்ட வேண்டும். சொக்கலிங்காபுரத்தில் ஆரம்ப பள்ளி, கன்னிசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என பேசினார்.

Related Stories: