×

உத்திரமேரூர் அருகே பட்டஞ்சேரி கிராமத்தில் சாலையாக மாறிய உபரிநீர் கால்வாய்: ஆக்கிரமிப்பாளர்கள் அட்டகாசம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே சுமார் ஒரு ஏக்கர் உபரிநீர் கால்வாய், ஆக்கிரமிக்கப்பட்டு, சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. உத்திரமேரூர் அருகே   பட்டஞ்சேரி கிராமத்தில் சாலையோர விவசாய நிலத்தை, சென்னையை சேர்ந்த சிலர் வாங்கி, அந்த இடத்தில் வீட்டு மனை  அமைத்து வருகின்றனர். அந்த இடத்துக்கு அருகே உத்திரமேரூர் ஏரியில் இருந்து விவசாய நிலத்துக்கு செல்லும் உபரிநீர் கால்வாய் ஒன்று உள்ளது. அந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் பட்டஞ்சேரி, ஓங்கூர், நல்லூர் உள்பட கிராமத்தில் உள்ள சுமார் 300 ஏக்கர் விளை நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில், விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் மிக முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த கால்வாயின் இருபுறங்களிலும் பல்வேறு வகை மரங்களும் வளர்ந்து காணப்பட்டன.

இந்நிலையில் இந்த கால்வாய் அருகே புதிதாக அமைக்கப்பட்டு வரும் வீட்டுமனை உரிமையாளர்கள், சுமார் 1 ஏக்கருக்கு மேலான கால்வாயை ஆக்கிரமித்து மனைப்பிரிவாக மாற்றி வருகின்றனர். 16 அடி அகலம் கொண்ட கால்வாய், தற்போது 3 அடியாக சுறுங்கிவிட்டது. மேலும், கால்வாய் ஓரங்களில் இருந்த 50க்கும் மேற்பட்ட பல்வேறு மரங்களை, அவர்கள்  அகற்றி விட்டதாகவும் அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மனை பிரிவுக்கு மிக அருகில் சாராயக் குட்டை எனப்படும் குட்டை உள்ளது. இந்த குட்டையின் ஒரு பகுதியையும் இந்த வீட்டுமனை உரிமையாளர்கள், ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த ஆக்கிரமிப்பால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழக அரசு, உயர்நீதி மன்ற உத்தரவுபடி, நீர்நிலை ஆக்கிரமிப்புக்களை அதிரடியாக அகற்றி வருகிறது. இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம், போர்கால அடிப்படையில் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, கால்வாயை தூர்வாரி சீரமைக்க வேண்டும். நீர்நிலையை ஆக்கிரமித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Patancheri village ,Uttiramerur ,
× RELATED உத்திரமேரூரில் ஒரே நாளில் 2,286 பேருக்கு கொரோனா தடுப்பூசி