கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்மாய்களை தூர்வார வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

வருசநாடு, ஏப். 22: தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் கண்டமனூர் புதுக்குளம், சிறுகுளம், கோவில்பாறை கண்மாய், கெங்கன்குளம், பஞ்சம்தாங்கி கண்மாய், நரியூத்து பெரியகுளம், செங்குளம், கடமான்குளம், சாந்தநேரி கண்மாய், அம்மாகுளம் உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இதில் ஒரு சில கண்மாய்களை மட்டும் தூர்வாரி, பல கண்மாய்களை தூர்வாரமல் உள்ளனர். இதனால், தோட்டங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகள், கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து பாசனத்திற்கு பாதிப்பு ஏற்படும். கிராமங்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்துக் கண்மாய்களையும் தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கண்டமனூர் சமூக ஆர்வலர் பழனிச்சாமி கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் 12க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களை முறையாக தூர்வாரி ஆழப்படுத்தினால் குடிநீர் பஞ்சம் நீங்கும். மேலும் விவசாயிகளுக்கு தேவையான பாசன நீர் கிடைக்கும். கண்டமனூர் புதுக்குளம் கண்மாயில் தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: