×

சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா நிறைவு பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர்

சின்னாளபட்டி, ஏப். 22:  சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றதையடுத்து கள்ளழகர் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். சின்னாளபட்டியில் ஸ்ரீராம அழகர் தேவஸ்தான கமிட்டி சார்பில் சித்திரை திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் திருவிழா நிறைவு ெபற்றதையடுத்து, கீழக்கோட்டை காமயசுவாமி கோயில் கமிட்டி சார்பில் கள்ளழகர் பூப்பல்லக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி, தசவதார கொட்டகையிலிருந்து, மேளதாளம் முழங்க காமயசுவாமி கோயிலுக்கு ஸ்ரீ ராம அழகர் அழைத்து வரப்பட்டார். பின்னர் அங்கு ஸ்ரீ ராம அழகருக்கு கள்ளழகர் அலங்காரம் செய்தனர். பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீ ராம அழகர் எழுந்தருளினார். ஸ்ரீ ராம அழகரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து ஸ்ரீ ராம அழகர் தேவஸ்தான கமிட்டியினரின் சிறப்பு பூஜைக்கு பின் கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் கொடியசைத்து வைத்தார். இதனையடுத்து காமயசுவாமி கோயில் கமிட்டியினர் மற்றும் இளைஞரணியினர் ‘கோவிந்தா கோவிந்தா’ கோஷத்துடன் பூப்பல்லக்கை சுமந்து சென்றனர். கோட்டைமந்தை அரசமரம் அருகே, குறிப்பிட்ட சமுதாய மக்களிடம், பூப்பல்லக்கை, கோயில் கமிட்டியினர் ஒப்படைத்தனர். இதனையடுத்து சின்னாளபட்டி பிரிவு அருகே உள்ள பிருந்தாவன தோப்பிற்கு கள்ளழகர் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார்.

வழிநெடுகிலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், வாழைப்பழம், பூ, காசு, மாதுளைம்பழம், திராட்சைப் பழம் ஆகியவற்றை சுவாமியின் மீது எறிந்து காணிக்கை செலுத்தினர். விழா ஏற்பாடுகளை காமயசுவாமி கோயில் கமிட்டி பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார், தலைவர் முருகேசன், செயலாளர் ராகவன், பொருளாளர் பொன்ராஜ், உதவித்தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, அய்யாவு, பால்பாண்டி, கௌரவ ஆலோசகர் சிவமுருகேசன் தலைமையிலான விழா கமிட்டியினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்பாத்துரை காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் செய்திருந்தார்.

Tags : Chithrai festival ,Chinnalapatti ,Kallazhagar ,Bhopal ,
× RELATED சித்திரை திருவிழாவின் முக்கிய...