×

சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகாலில் கழிவுநீரை வெளியேற்றினால் அபராதம்: துணை மேயர் மகேஷ்குமார் எச்சரிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள மழைநீர் வடிகாலில் கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் எச்சரித்துள்ளார். மெரினா கடற்கரையில் பூங்கா, கழிப்பறை, நீச்சல்குளம் ஆகியவற்றை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் ஆய்வு செய்தார். அப்போது, மண்டல குழு  தலைவர் மதன்மோகன், மண்டல அலுவலர்,  மாமன்ற உறுப்பினர்கள் நந்தனம்  மதி, மங்கை ராஜ்குமார், ரேவதி, வட்ட செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, தமீம்  அன்சாரி, செயற்பொறியாளர்  உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, துணை மேயர் மகேஷ்குமார் நிருபர்களிடம் பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கு மெரினா கடற்கரையில் நிரந்தர மரப்பாதை அமைக்க ரூ.1.14 கோடி  ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த மரப்பாதை 208 மீட்டர் நீளமும், 3 மீட்டர் அகலமும் கொண்டதாக அமையும்.  விரைவில் இந்த பணிகள் தொடங்க உள்ளது. வெளிநாட்டு  கடற்கரைகளை  போல மெரினா கடற்கரையையும் அழகுபடுத்த முதல்வரின் கனவு திட்டமான ப்ராஜக்ட் ப்ளூ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இணைப்புகளை கண்டறிந்து அவற்றை துண்டிப்போம். இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். சென்னையில் மாடுகளை வளர்ப்போர் குறிப்பிட்ட எல்லைக்குள்ளே அவற்றை பராமரிப்பதற்கு ஏற்ற வகையில்  மாநகராட்சி மூலம் இட வசதி ஏற்படுத்தித் தரப்படும். இவ்வாறு பேசினார்.

Tags : Chennai ,Deputy Mayor ,Maheshkumar ,
× RELATED சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த...