×

தேனி நுகர்வோர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் அமர்வு பொறுப்பேற்பு

தேனி, ஏப். 21: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்பட்டு வருகிறது. கொரோனா காலம் முதலாக இந்நீதிமன்றத்திற்கான நீதிபதி மற்றும் 2 உறுப்பினர்கள் இல்லாத நிலை இருந்து வந்தது. இதனால், இந்நுகர்வோர் குறைதீர்மன்றத்தில் சுமார் 170 வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தன.

இந்நிலையில், தேனி நுகர்வோர் குறைதீர் மன்றத்திற்கு புதிய நீதிபதி அமர்வு நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, தேனி நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் நீதிபதிகளாக மூவர் கொண்ட அமர்வு நியமிக்கப்பட்டனர். இதில் நீதிபதியாகவும் அமர்வின் தலைவராகவும் பி.சுந்தர், அமர்வின் உறுப்பினர்களாக எம்.கே.அசீனா, எஸ்.ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டு பணிகளை துவக்கியுள்ளனர்.

புதிய நீதிபதி பி.சுந்தர் கூறியதாவது: நுகர்வோர் சட்டம் 2019ன் படி புதிய நுகர்வோர் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இத்தகைய சட்டப்பிரிவானது கொரோனா காலத்தில் வந்ததால் பெரும்பாலானவர்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாத நிலை உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 170 வழக்குகள் இப்போது விசாரணைக்கு எடுக்கப்பட்டு நாள்தோறும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் பொறுப்பேற்ற பிறகு புதியதாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்குகளும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

நுகர்வோர் குறைதீர் மன்றத்தை பொறுத்தவரை, சாதாரண மக்களுக்கான உரிமையியல் நீதிமன்றமாக செயல்படும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. இதுபோல் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு எளிமையாக்கப்பட்டுள்ளது. இ.தாக்கில் எனும் முறையில் ஆன்லைன் மூலமாகவே நுகர்வோர் தங்கள் வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம். இ.தாக்கில் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நேரடியாக விசாரணை செய்யப்பட்டு தீர்வு அளிக்கப்படும்’ என்றார்.

Tags : Honey Consumer Court ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு