×

போடி அருகே பள்ளி வகுப்பறை ஓடுகள் சேதம்

போடி, ஏப். 21: போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி தர்மத்துபட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 80 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தலைமையாசிரியர் உள்பட 7 பேர் பணியில் உள்ளனர். இப்பள்ளி வளாகத்தில் 3 வகுப்புகள் கொண்ட கட்டிடத்தின் மேற்கூரை ஓடுகள் முழுவதும் பழுதாகி மழை பெய்யும் தண்ணீர் ஒழுகுகின்றது. இதனால் மாணவ, மாணவிகள் அவ்வகுப்பறையில் அமர்ந்து படிக்க முடியாமல் போனது. இதையடுத்து அக்கட்டிடத்தை பயன்படுத்தாமல் அடைத்து விட்டு, அருகிலுள்ள வகுப்பறைகளில் மாணவ, மாணவிகளை அமர வைத்து பாடம் நடத்தி வருகின்றனர்.

இதனால் இடநெருக்கடியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது. இங்குள்ள சத்துணவு மைய கூடமும் சிதிலமடைந்து கிடப்பதால் திறந்தவெளியில் சமையல் செய்யும் அவலநிலை உள்ளது. மேலும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இதுவரை எழுப்பாததால் இரவு நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் வகுப்பறைகள் சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பள்ளியின் வகுப்பறை, சமுதாயக்கூடத்தை சீரமைத்து தருவதுடன், சுற்றுச்சுவர் எழுப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bodi ,
× RELATED போடி விரிவாக்க சாலையில் சாலை நடுவே...