பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா மின்னொளி அலங்கார ஆடம்பர தேர்பவனி

பாபநாசம்,ஏப்.21: பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் திருவிழா மின்னொளி அலங்கார ஆடம்பர தேர் பவனி விடிய விடிய நடைபெற்றது இதில் திரளானோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மறைமாவட்டம் பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பாஸ்கு ஞாயிறுக்குப் பிறகு 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. பல ஊர்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் திருவிழாவிற்கு வருகை புரிந்து புனிதரின் ஆசிரை பெற்று சென்றார்கள். திருவிழாவில் 5 தேர்கள் பவனி வந்தது. காவல் சம்மனசு, புனித சூசையப்பா, உயிர்த்த இயேசு, மாதா சொரூபங்கள் ஆகியன வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நான்கு வீதிகளில் விடிய விடிய வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. ஜாதி, மதம், மொழி என்று பாராமல் அனைத்து மக்களும் இத்திருவிழாவில் கலந்து கொண்டனர். குடந்தை மறைமாவட்ட முதன்மை குரு தேவதாஸ், குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி ஆகியோர் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை கோஸ் மான் ஆரோக்கிய ராஜ், மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் டிஎஸ்பி பூரணி, இன்ஸ்பெக்டர் அழகம்மாள் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories: