அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

சிதம்பரம்,  ஏப். 21: சிதம்பரம் அரசு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் திடீர் ஆய்வு நடத்தினார். மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற ஆட்சியர், மருத்துவ அதிகாரிகளிடம் பல்வேறு விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து மருத்துவமனை சுற்று வளாகம், மகப்பேறு பிரிவு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்தினார். பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறுகையில், தமிழக முதல்வர் உத்தரவுப்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றை தூய்மையாக வைத்திருப்பது, நோயாளிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் மருத்துவமனையை சுத்தமாக வைத்திருத்தல், கழிவு நீர், மருத்துவ கழிவு உள்ளிட்டவற்றை சிறந்த முறையில் கையாள்வது போன்றவை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.ஒவ்வொரு மருத்துவமனையிலும் தலைமை மருத்துவ அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தினமும் நடைபெறும் பணிகள் கண்காணிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு நல்ல சேவை அளிக்கும் வகையில் மருத்துவமனைகள் செயல்படுகிறது. கடந்த 18 தினங்களில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கினர். மருத்துவமனைகள் தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்கப்படும், என்றார்.

Related Stories: