×

காட்டுப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும்: பேரவையில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ கோரிக்கை

திருவள்ளூர்: தமிழக சட்டப்பேரவையில் பூந்தமல்லி தொகுதி திமுக எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி பேசியதாவது; 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராம ஊராட்சிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அமைச்சர் ஏற்கனவே இந்த அவையில் பதிலுரையில் சொல்லியிருக்கிறார். இதன்படி பூந்தமல்லி தொகுதி, பூந்தமல்லி ஒன்றியம், காட்டுப்பாக்கம் கிராமத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை வாழக்கூடிய பகுதியில் துணை சுகாதார நிலையம் இருக்கிறது. அதனை ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்; 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட எல்லா இடங்களிலும் சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம். ஆனாலும்கூட ஒன்றிய அரசு கடந்த 4 ஆண்டுகளாக எந்த சுகாதார ஒதுக்கீடு செய்யவில்லை. இந்தாண்டு முதல்வரின் தீவிர முயற்சியின் காரணமாக 25 சுகாதார நிலையங்கள் மட்டுமே தமிழக அரசுக்கு ஒதுக்கீடு வந்திருக்கிறது. இதில் எதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதை அந்தந்த சுகாதார மாவட்ட அலுவலர்களோடு கலந்து பேசி, எந்தப் பகுதி மக்களுக்கு தேவை என்பதையும் அறுதியிட்டு, அறிவிக்கப்பட இருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் சொல்லியிருப்பதைப்போல பூந்தமல்லிக்கு தேவைப்படின் அதற்கான ஏற்பாடுகளை பரிசீலிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags : A. Krishnasamy ,MLA ,Assembly ,
× RELATED பூந்தமல்லி தாலுகா அலுவலகத்தில்...