படகு சவாரி, பூங்கா, நடைபாதை அமைத்து அம்பத்தூர், கொரட்டூர் ஏரியில் சுற்றுலா தலம்: பேரவையில் ஜோசப் சாமுவேல் எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் (திமுக) பேசியதாவது: அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் பல கணினி தொழில் நிறுவனங்கள் நிறைந்த பெரிய தொழிற்பேட்டை அமைந்த தொகுதியாகும். எனவே, இந்த பகுதிக்கு சென்னை திருமங்கலம் வரை இயங்கி கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையம் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின்கம்பிகளை புதைவடமாக மாற்றித்தர வேண்டும். அம்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் இதுவரை சுற்றுலாத்தலம் எதுவும் இல்லை. அதனால், அம்பத்தூர் ஏரி மற்றும் கொரட்டூர் ஏரிகளில் படகு சவாரி, பூங்கா மற்றும் நடைபாதைகளுடன் கூடிய சுற்றுலாத்தலமாக மாற்றி அமைத்து தர வேண்டும். வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான காலி இடங்கள் உள்ளது. இதில் நவீன சமூக நல கூடம் கட்டித்தர வேண்டும். புதிதாக அரசு பொது மருத்துவமனை ஒன்று அமைத்து தர வேண்டும். இவ்வாறு பேசினார்.

Related Stories: