அமைந்தகரை 8வது மண்டலத்தில் பிளாஸ்டிக் கவர்கள் விற்ற 18 கடைகளுக்கு அதிரடி சீல்: அதிகாரிகள் நடவடிக்கை

அண்ணாநகர்: அமைந்தகரை 8வது மண்டலத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்த 18 கடைகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள்  அதிரடியாக சீல் வைத்தனர். அமைந்தகரை 8வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில்  டீ கடை, பிரியாணி கடை, பேக்கரி, துணி கடைகள் மற்றும் ஓட்டல்கள் உள்ளது. இங்கு,  அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக  சுகாதாரத்துறை அலுவலர் விஜயக்குமார்,  வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் சம்பந்தபட்ட இடங்களில் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்து உரிமையாளருக்கு அபராதம் விதித்தனர். மேலும் இனிமேல் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில், நேற்று காலை இந்த பகுதிகளில் மீண்டும் உதவி வருவாய் துறை அதிகாரி ரவிச்சந்திரன், லட்சுமணகுமார் மற்றும் உரிமம் ஆய்வாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள டீ கடை, பிரியாணி கடை, ஜவுளி கடை மற்றும் ஓட்டல்களில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட  பிளாஸ்டிக் கவர்கள் மொத்தம் 200 கிலோவை  பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த  18 கடைகளை பூட்டி சீல் வைத்தனர். கடையின் ஷட்டர் மீது நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

8 கடைகளின் சீல் அகற்றம்

கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்த 8 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். நேற்று முன்தினம் 100க்கும்  மேற்பட்ட வியாபாரிகள் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தியை  சந்தித்து, `காய்கறி மார்க்கெட்டில் பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை செய்யமாட்டோம். இதனை மீறி விற்பனை செய்தால் எங்களது கடைகளை சீல் வைத்துகொள்ளலாம்’  என உறுதிமொழி  கடிதம் எழுதிக்கொடுத்தனர். அதன்படி சீல் வைக்கப்பட்ட 8 கடைகளும்  திறந்து விடப்பட்டன.

Related Stories: