×

ஒதுக்கப்பட்ட வீடுகள் இதுவரை வழங்கப்படவில்லை சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வீடு வழங்க வேண்டும்: பேரவையில் மயிலை த.வேலு எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் இதுவரை வழங்கப்படவில்லை. இதை ஆய்வு செய்து உடனடியாக வழங்க வேண்டும் என மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு கூறினார். சட்டப்பேரவையில் நேற்று வீட்டு வசதி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு (திமுக) பேசியதாவது:

கடந்த ஆட்சியில் நொச்சிகுப்பம் பகுதியில் வீடு ஒதுக்குவதில் முறைகேடு நடந்துள்ளதால், இந்த ஆட்சியில் உண்மையான பயனாளிகளுக்கு வீடு சென்றடைய வழிவகுக்க வேண்டும். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகள் இதுவரை வழங்கப்படவில்லை. இதை ஆய்வு செய்து உடனடியாக வழங்க வேண்டும். சுனாமியால் பாதித்தவர்கள் இன்றைக்கும் வீடு இல்லாமல் வெளியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்கனவே உத்தரவாதம் வழங்கப்பட்டபடி புதிய வீடுகள் வழங்க வேண்டும்.

ஏழைகளுக்கு வழங்கப்படும் வீடுகள் வழங்கும் நடைமுறைகளை இன்னும் எளிமையாக்க வேண்டும். மயிலாப்பூரில் கட்டி முடிக்கப்பட்ட 324 இன்னும் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இந்த பயனாளிகள் சுமார் 5 வருடமாக வெளியே வாடகைக்கு இருக்கிறார்கள். வரும் காலங்களில் இதுபோன்ற காலதாமதம் ஏற்படாமல் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வண்ணம் செயல்பட வேண்டும்.

மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் மீனவர்களுக்கு மீன் அங்காடி அமைத்து தர வேண்டும். மீன் அருங்காட்சியம் அமைக்க மீன்வளத்துறை ரூ.1 கோடி வழங்க ஒப்புதல் தந்துள்ளார்கள். அதற்கு அடையாறு ஆற்று பகுதியில் உள்ள காலி இடத்தை வருவாய்த்துறை ஆய்வு செய்து அந்த இடத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். இங்கு சுற்றுலாத்துறை அனுமதி அளித்தால் படகு சவாரி முகாமும் அமைக்கலாம். மயிலை பகுதியில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை திறக்கும் நிலையில் உள்ளதால் அந்த மருத்துவமனையை 24 மணி நேர மருத்துவமனையாகவும், உடல் முழு பரிசோதனை மையமும் அமைத்து தர வேண்டும்.

மயிலாப்பூரில் சண்முகாபுரம், கணேசபுரம், பாரதி நகர், சண்முகபிள்ளை தெரு போன்ற சில இடங்களில் பாதி இடத்துக்கு பட்டா கொடுத்துள்ளார்கள். பாதி இடத்துக்கு பட்டா வழங்கவில்லை. அவர்களுக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரை ஓரம் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலை, பட்டினப்பாக்கம் பகுதியில் வீட்டு வசதி துறைக்கு சொந்தமான 23 ஏக்கர் இடம் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால், சுற்றி முள்வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும். வாரியம் சார்பில் கட்டப்படும் புதிய குடியிருப்புகளுக்கு கலைஞர் பெயர் சூட்டப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Tsunami ,Mayilai T.Velu ,MLA ,Assembly ,
× RELATED மாமல்லபுரத்தில் சுனாமியின்போது...