போக்குவரத்து நெருக்கடியை குறைக்க கோட்டையூர், அரியக்குடியில் மேம்பாலம் கட்ட வேண்டும் மாங்குடி எம்எல்ஏ கோரிக்கை

காரைக்குடி, ஏப்.20: காரைக்குடி அருகே கோட்டையூர் மற்றும் அரியக்குடி சாலைகளில் போக்குவரத்து நெருக்கடியை போக்க  மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது என மாங்குடி எம்எல்ஏ தெரிவித்தார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கூறுகையில், காரைக்குடி தொகுதி வளர்ச்சிக்கு கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் வைக்கப்பட்ட கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றி தந்துள்ளார். ஏற்கனவே கோரிக்கை விடப்பட்ட காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும், மகளிர் கலை அறிவியல் கல்லூரி, புதுவயலை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா ஆகியவற்றை நிறைவேற்ற மீண்டும் கோரிக்கைவிடப்பட்டுள்ளது.

தவிர கோட்டையூர் ரயில்வே கேட் பகுதி மற்றும் அரியக்குடி இலுப்பகுடி சாலையில்  மேம்பாலம் அமைக்க வேண்டும். அழகப்பா பல்கலைக்கழகம்,  கல்லூரி வளாக சாலையின் இருபுறங்களிலும் நடைமேடை அமைக்க வேண்டும். வள்ளுவர் நகர், பர்மா காலனி பகுதியில் மழைநீர் செல்ல வசதியாக கால்வாய் அமைக்க வேண்டும். தேவகோட்டை ரஸ்தா பழைய செஞ்சை பிரிவிலிருந்து காட்டம்மன் கோவில் வழியாக புறவழிச்சாலை அமைக்க வேண்டும். தாலுகா அலுவலகம்,  தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலகம், வணிகவரி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.

சங்கராபுரம், புளியால் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். அண்ணாநகர், ஜீவாநகர், அழகப்பாபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பட்டா வழங்க வேண்டும். ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும். கால்நடை மருத்துவமனையில் கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க வேண்டும். தேவகோட்டை சருகணியில் துணைமின்நிலையம் அமைக்க வேண்டும். பழைய பஸ் ஸ்டாண்டை புதுப்பிக்க வேண்டும். தேவகோட்டை நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் வேண்டும் உள்பட பல்வேறு தொகுதியின் வளர்ச்சிக்கு தேவையான பல்வேறு கோரிக்கை குறித்து சட்டமன்றத்தில் பேசப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: