×

மின்வாரியத்திற்கு மாநகராட்சி கடிதம்

மதுரை, ஏப்.20: மதுரை மாநகராட்சியில் வீடு உள்ளிட்ட குடியிருப்புகள் கட்டுவதற்கு நகரமைப்பு பிரிவில் மனு அளிக்க வேண்டும். அப்பிரிவு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று அளந்து சரியாக இருக்கும் பட்சத்தில் வரைபட அனுமதி வழங்குவார்கள். ஆனால் பலர் வீடு கட்டுவதாக கூறி வரைபட அனுமதி பெற்று விட்டு அந்த கட்டிடத்தை வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவார்கள். வணிக பயன்பாட்டிற்கு மின் கட்டணம் அதிகம். வீடு என மின் இணைப்பு வாங்கி விடுவதால் மின் கட்டணம் குறைவாக கணக்கிடப்படும். இதனால் மின்வாரியத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த முறைகேடு குறித்து மாநகராட்சியின் கவனத்திற்கு மின்வாரியம் கொண்டு வந்தது. இதையடுத்து வணிக பயன்பாட்டிற்கு மின் இணைப்பு பெற்றவர்கள் பெயர் விலாசம் உள்ளிட்ட விபரங்களை மாநகராட்சி வசம் மின்வாரியம் ஒப்படைத்தது. இந்த பட்டியலை வைத்து மாநகராட்சியில் வீடு கட்டுவதற்காக வரைபட அனுமதி பெற்றவர்களின் பெயர் பட்டியலுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்ட போது பலர் முறைகேட்டில் ஈடுபட்டு இருந்தது தெரிந்தது. வரைபட அனுமதியை ரத்து செய்ததுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் முறைகேட்டை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்து வருகிறது.

இது குறித்து செயற்பொறியாளர் சுப்புத்தாய் கூறுகையில், ‘முறையான வரைபட அனுமதியில்லாத கட்டிடங்களுக்கு மின் இணைப்பு தர வேண்டாம் என மின்வாரியத்திற்கு மாநகராட்சி பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. அதுபோல மாநகராட்சிக்கும் மின்வாரியம் பரிந்துரை கடிதம் அனுப்பியிருக்கிறது. இந்த விஷயத்தில் இரு துறைகளும் கவனமாக இருப்பதால் முறைகேடு ஏற்பட வாய்ப்பில்லை’ என்றார்.

Tags : Electricity Board ,
× RELATED அரசு வாகனத்தில் மது அருந்திய...