பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கருப்பு திராவிடன் என்பதை கொள்கையால் உணர்த்த வேண்டும்

திருப்பூர், ஏப். 20: பாஜ தலைவர் அண்ணாமலை கருப்பு திராவிடன் என்பதை கொள்கையால் உணர்த்த வேண்டும் என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார். திராவிடர் கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரை நாகர்கோவிலில் தொடங்கி சென்னை வரை நடைபெறுகிறது. இந்நிலையில் திருப்பூர் வெள்ளியங்காடு நால்ரோட்டில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் யாழ் ஆறுச்சாமி வரவேற்றார். பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன், தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன் ஆகியோர் பேசினர். திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராசன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரவி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்து கண்ணன், மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ், திமுக வட்ட செயலாளர் நந்தகோபால், திமுக நிர்வாகி திலக்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் படித்த மாணவர்களின் எதிர்காலத்துக்காக, வேலைவாய்ப்புக்காக, இட ஒதுக்கீட்டிற்காக, சமூகநீதிக்காக மாவட்டந்தோறும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். வரும் 25ம் தேதி சென்னையில் நடைபெறும் பிரசார பயண நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார். தமிழகத்தில் ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடப்பதை மக்களிடம் சென்று சேர்ப்பதே எங்கள் வேலை.

நீட் தேர்வு விலக்கு வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை இன்னும் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கவர்னர் காலதாமதம் செய்வது சரியானது அல்ல. மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்புவது என்பது அரசியல் சட்டப்படி கவர்னருக்கு உடைய கடமையாகும். கவர்னருக்கும், நமக்கும் தனிப்பட்ட பிரச்னை இல்லை என முதல்வர் தெளிவாக கூறியிருக்கிறார். தமிழர்களை அழித்தவர்கள், இனப்படுகொலை செய்தவர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ளனர். இன்று அவர்களையே பாதிக்கும் அளவிற்கு சிங்களர்கள் எதிர்க்கிறார்கள். தமிழர்கள் கவுரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழகம் வருகிறார்கள்.

பாஜ தலைவர் அண்ணாமலை கருப்பு திராவிடன் எனக்கூறியது, அவர் கட்சிக்குள் உள்ள பிரச்னைகளுக்கு பதில் கூறியிருக்கிறார். கருப்பு திராவிடன் என தோல் நிறத்தை பார்த்து சொல்வதல்ல. தோளை உயர்த்த வேண்டும் என சொல்கிறோம். நீட் தேர்வு, குலக்கல்வி திட்டம், மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றிற்கு துணை போய்விட்டு நான் கருப்பு திராவிடன் என்று சொன்னால் மட்டும் போதாது. கொள்கையால் அதனை அண்ணாமலை உணர்த்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: